இருக்குவேளிர்
தமிழர் வரலாறு என்பதை பேசும் போது மூவேந்தர் எந்தளவு முக்கியமானவர்களோ அதே அளவு வேளிர்களும் முக்கியமானவர்கள். வேளிர் வரலாறு பேசாமல் தமிழரின் வரலாறு இல்லை என்று சொல்லலாம்
இவ் வேளிர் குடிகளில் முக்கிய குடியினர் இருக்குவேளிர், இவர்கள் இருங்கோளர்-இளங்கோவேளிர் என்றும் அறியப்பட்டனர், இவர்களில் புகழ் பெற்றவன் புலிகடிமால் என்கிற இருங்கோவேள் மற்றும் அவனின் முன்னோர் வேள் எவ்வி, எனவே இருக்குவேளிர் வரலாற்றை பற்றி அறிவதற்கு இவர்கள் இருவரின் வரலாறும் அறிந்து கொள்ள வேண்டும்,
எவ்வி & இருங்கோவேள் சங்க கால அரசர் ஆவார்கள், இருங்கோவேள் என்ற அரசனின் பெயரையே தன் அரச குடி பெயராக கொண்டு பல்லவர் மற்றும் பிற்கால சோழர் காலத்தில் கொடும்பாளூர், இருங்கோளபாடி ஆட்சி செய்தவர்கள் இருக்குவேளிர்கள் ஆவர்
எவ்வி ஆட்சி செய்த பகுதி மிழலைகூற்றம், இது ஒரு கடற்கரை நகரம், இதை தவிர நீடூர், உறத்தூர் ஆகிய பகுதிகளும் இவனுக்கு உரியது என்பது சங்க பாடல்கள் குறிக்கிறது
எவ்வி அவர்களை மிகவும் தொன்மையானவன் என்று புறப்பாடல் குறிப்பிடுகிறது "தொன்முதிர் வேளிர்" (புறம் 24)
பாரி மகளிரை இருங்கோவேளிடம் மணந்து கொள்ள வினைய அதனை அவன் மறுக்கிறான்
"எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்றிவர் கைவண் பாரி மகளி ரென்றவென் தேற்றாப் புன்சொ னோற்றிசிற் பெரும" (புறம் 202)
இதனால் மனம் நொந்த கபிலர் அவர்கள், இந்த வேள் பாரி அவர்களின் மகள்கள் எவ்வியின் தொன்மையான குடியான இருங்கோவேளுக்கு வாழ்க்கை பெறுவார்கள் என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றார், இதன் மூலம் எவ்வி அவர்கள் இருங்கோவேளின் குடியை சேர்ந்தவன் என்பது விளங்கும், எவ்வியை சங்க இலக்கியங்கள் தொல்குடியினன் என்று குறிப்பிடுவதை காண முடிகிறது, எனவே இருங்கோவேள் மன்னன் வழி வந்த இந்த இருக்குவேளிர் மரபினர் மிகவும் பழமை வாய்ந்தவர்கள் என்பதை அறியலாம்
எவ்வி வழி வந்த இருங்கோவேள் என்கிற புலிகடி மால் பற்றி மேலும் சில தகவல்கள்
பறம்பு மலையை ஆண்ட வேள் பாரியின் உற்ற தோழர் கபிலர். பாரி கூடவே கபிலர் பயணித்து இருந்ததால் பாரியின் வேள் குல வரலாற்றை அவர் நன்கறிந்திருந்தார் எனலாம்
பாரி இறந்த பின் அவரின் மகள்களை மற்றொரு வேளிர் குலத்தவனான இருங்கோவேளிடம் கொண்டு சென்று மணந்துகொள்ள கேட்கும் போது வேளிர் குலத்தின் சிறப்பினை இருங்கோவேளின் அவையில் பாடுகிறார்
"நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி, செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, உவரா ஈகை, துவரை ஆண்டு, நாற்பத்தொன்பது வழிமுறை வந்தளி வேளிருள் வேளே!"
இதற்கு உரை எழுதிய பழைய உரைக்காரர் உவே சுவாமிநாத ஐயர் உரையில் என்ன குறிப்பிடுகிறார் என்றால், அதாவது உன் வம்சம் வடபால் முனிவன் என்கிற சம்பு அல்லது அகஸ்திய முனிவரின் ஓம குண்டத்தினுள் தோன்றி 49 வழிமுறைகளாக உயரமான செம்பு சுவர்களால் சூழ்ந்த துவாரகை நகரை ஆட்சி செய்த சிறப்பினை உடையவர்கள் என்கிறார், இது தமிழகத்தில் இன்றும் வன்னியர் மக்கள் தங்களை சம்பு முனிவன் என்கிற அகத்தியரின் யாகத்தில் தோன்றியவர் என்று குறிப்பிடுவதாகும், இதனை அவர்கள் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர்
மேலே நாம் கண்ட இந்த எவ்வி மற்றும் இருங்கோவேளின் வழியினர் கொடும்பாளூர் பகுதியை பல்லவர், சோழர் காலத்தில் ஆட்சி செய்து வந்துள்ளனர், மேலும் இவர்கள் ஆட்சி செய்த பகுதிக்கு இருங்கோளபாடி என்றும் பெயர் இருந்துள்ளது, இது திட்டகுடி, விருதாச்சல், பெண்ணாடம், காட்டுமன்னார்கோயில், விளந்தை, உடையார் பாளையம் ஆகியனவாகும்
இத்தகைய இருக்குவேளிர்களின் வரலாற்றை மூவர் கோயில் கல்வெட்டு மிக தெளிவாக பதிவு செய்துள்ளது, அதன் தமிழ் விளக்கம் கீழே காண்போம் -
"யானைகளின் நிறைகளை கவர்ந்த ஒருவன் இவர்கள் வம்சத்தின் முதலில் அறியப்படுபவன்"
"மழவர்களை வென்ற பரவீரஜித் அந்த வம்சத்தை சேர்ந்தவன். அவனுக்கு அனுபமனான அதிவீரன் பிறந்தான். அவனுக்கு ஸ்ங்கக்ருத் பிறந்தான். அவனுக்கு வாதாபியை வென்ற பரதுர்க்க மர்த்தனன் என்ற புகழ்வாய்ந்தவன் மகனான்"
"அவனுக்கு இந்திரனை ஒத்த வலிமைவாய்ந்த ஸ்மராபிராமன் மகன். அவன் அதிராஜமங்கலப்போரில் சாளுக்கியரைக் கொன்றான்"
"யது வம்சத்தின் கொடி(யதுவம்சகேதோ) போன்ற அவனுக்கு அச்யுதனுக்குத் திருமகள் போலவும் தாமரையில் தோன்றிய ப்ரஹ்மாவிற்கு ஸரஸ்வதியை போலவும் சிவனுக்குப் பார்வதியைப் போலவும் அனுபமா என்று பொருளோடு இயைந்த பெயர்கொண்ட சோழ அரசனின் மகள் மனைவியாக இருந்தாள்"
"அந்த சோழ மகளிடமிருந்து பூதி மீனாமழவன் என்பவன் தோன்றினான். அவன் போர்களில் விக்கிரமகேசரி என்ற மற்றொரு பெயரை அடைந்தான். அவன் பல்லவ படைகளின் குருதி கொண்டு காவேரி ஆற்றினை சிவப்பாக்கினான், வீர பாண்டியனை வென்றான்"
"அவன் மதம் பிடித்த எதிரியின் யானைகளை அழித்துக் கொடும்பாளூரில் உள்ள இந்திர மாளிகையின் இடை வாழ்கிறான்"
"அவனுக்கு கற்றளி, வரகுனண என்பர் தேவிகளாக இருந்தனர். அவர்களில் கற்றளி பராந்தகன், ஆதித்யன் ஆகிய இருவருக்கும் தாயானார்"
"ஆத்ரேய கோத்திரத்தில் பிறந்தவரும் மதுரையை சேர்ந்தவரும் வேதத்தின் கரையை கண்டவரும் கல்வி நிதியும் தவத்தின் நிதியுமானவரின் சிஷியருமான மல்லிகார்ஜுனர் இருந்தார்"
"அந்த அரசன் தன் பெயராலும் தன் மனைவிகளின் பெயராலும் மூன்று கோயில்களை எழுப்பி மஹேச்வரனைப் பிரதிஷ்டை செய்து பெரிய மடத்தை அவருக்கு அளித்தான்"
"காளாமுகர் என்று அறியப்படும் அந்த துறவிகளில் சிறந்தவருக்கு யாதவனான அரசன்(இருக்குவேளிர்) பதினோரு சிற்றூர்களை உள்ளடக்கிய பெரிய மடத்தை அளித்தான்"
முத்தரையர், பழுவேட்டரையர்கள் மற்றும் சோழர்களோடு இருக்குவேளிர்களுக்கு மிக நெருங்கிய திருமண பந்தம் இருந்துள்ளது, அவற்றை விரிவாக காண்போம்
ஆதித்த சோழருக்கு இரண்டு மகன்கள் பராந்தகன் மற்றும் கன்னர தேவன்.
ஆதித்த சோழருக்கும் இராஷ்டிரக்கூட இளவரசி இளங்கோபிச்சிக்கும் பிறந்த மகனான கன்னர தேவனுக்கு பூதிமாதேவடிகள் என்பவரை மணம் செய்து வைத்துள்ளார்கள். பூதிமாதேவடிகள் பூதிவிக்கிரமகேசரி என்கிற இருக்குவேளிர் மன்னரின் சகோதரி ஆவார்.
மேலும் பராந்தகனின் மகனான அரிஞ்சய சோழருக்கு பூதி விக்கிரமகேசரியின் மகள் பூதி ஆதிச்ச பிடாரியார் அவர்களை திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.
பூதிவிக்கிரமகேசரியின் மூத்த மகனான பூதிபராந்தகனுக்கு சோழ இளவரசியான சோழபெருந்தேவி என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார்கள். இந்த அம்மையார் அநேகமாக பராந்தக சோழரின் மகளாக இருக்க வேண்டும். மேலும் இந்த பூதிபராந்தகனின் மற்றொரு மனைவியாக முத்தரையர் குலத்தை சேர்ந்தவர் ஒருவர் இருந்துள்ளார்.
அடுத்து பூதிபராந்தகனின் மகன் பராந்தகன் குஞ்சரமல்லனான வீர சோழ இளங்கோவேள். இவர் அரிஞ்சய சோழரின் மகனான சுந்தர சோழரின் சகோதிரியான வரகுண பெருமானாரை மணந்துள்ளார்.
இந்த பராந்தகன் குஞ்சரமல்லன் வீரசோழ இளங்கோவேளின் சகோதரன் தான் ஈழத்துப்பட்ட பராந்தக சிறியவேளான் இவர் சுந்தர சோழரின் சேனாதிபதி இவரே சோழ படையை இலங்கை போரில் தலைமை தாங்கியவர். இவரின் செல்வி வானதி இவரின் கணவர் முதலாம் இராஜராஜ சோழர் இவரின் மகன் கங்கையும் கடாரமும் கைக்கொண்டு கங்காபுரி புரந்த கற்பகமாம் முதலாம் இராஜேந்திர சோழன். அதாவது பொன்னியின் செல்வன் புகழ் வானதி இவர் தான்
இது தவிர விக்கிரமசோழ இளங்கோவேளார் என்பவர் பழுவேட்டரையரின் மகள் ஒருவரை மணந்துள்ளார்
இத்தகைய இருக்குவேளிர்களை கல்வெட்டுகள் "இருங்கோளர்" என்றும் குறிப்பிடுகிறது
"இருங்கோளக்கோனான புகழ்விப்பிரகண்டன் அவனி மல்லன்" (SII Vol 3, No.199)
"இருங்கோள கோனான நாராயணன் புகழ் உய்யப்பவர் கண்டன்" (A.R.E No.240 of 1916)
"ஆடவல்லான் கங்கை கொண்டான் ஆன இருங்கோளன்" (A.R.E No.261 of 1929)
"சேந்தமங்கலம் உடையான் அரையன் எதிரிலி சோழன் ஆன இருங்கோளன்" (A.R.E No.305 of 1919)
"சேணை திக்கணை மாடப் ஆன இருங்கோளன்" (A.R.E No.468 of 1919)
"பிள்ளை சேந்தமங்கலமுடையான் சிவதனைப் பிள்ளை ஆன இருங்கோளர்"
"இருங்கோளன் குணவன் அபராஜிதன்" (A.R.E No.384 of 1913)
"இருங்கோள பிரிதிவிபதி அவனி மல்லன்" (A.R.E No.49 of 1918)
இதில் இருங்கோள பிரிதிவிபதி அவர்களின் மனைவியாக அரசியார் மலையவ்வை தேவியார் குறிப்பிடப்படுகிறார், இவ்வம்மையார் பொத்தபி சோழரின் மகள் ஆவார்(கொடும்பாளூர் வேளிர் வரலாறு, பக்கம் - 144)
மேலும் நேரடி கொடும்பாளூர் இருக்குவேளிர்களும் இருங்கோளர் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர் (SII Vol.3, part-3, No.119,120,121)
பராந்தக இருங்கோள சிறிய வெளார் அவர்கள் இருங்கோளர் என்று அழைக்கப்பட்டவர், "ப்ராதிருங்கோளகுலப்ரதீபஹ" என்றும் குறிப்பிடப்படுகிறார். அதாவது இருங்கோள குலத்தின் தீபம் என்பதாகும்
இத்தகைய பெருமைமிகு இருங்கோளர் வம்சத்தினர் பள்ளி குலத்தவர்கள் என்பதை மேலே சங்க பாடலான புறநானூறு வழியாக கண்டோம் அல்லவா??? இதற்கு கல்வெட்டு சான்றுகளும் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும், அதாவது இந்த யாகத்தில் பிறந்தது பற்றியும், இருங்கோளர் பள்ளிகள் என்றும் கல்வெட்டு சான்றுகள் உள்ளது
"சம்பு மாமுனி மாபலி வந்தோர்"
"எழுபத்தொன்பது னாட்டுப் பன்னாட்டோம்(பள்ளி நாட்டார்)"
(அரியலூர் மாவட்ட கல்வெட்டுகள், செப்பேடுகள் பக்கம் - 117)
"பள்ளி கூத்தன் மதுராந்தகனான இருங்கோளராமன்" (A.R.E 259 of 1928/29)
இதன் மூலம் யது வம்சத்தை சேர்ந்த துவாரகை ஆண்ட தொன்மை மிகு இருங்கோளர் அல்லது இருக்குவேளிர் அல்லது இருங்கோவேள் எனும் அரச மரபினர் வன்னியர் என்பது தெரிய வருகிறது.
Comments
Post a Comment