வேளாளர் வேளிரா?
வேளாளர் வேளிரா?:-
தொல்காப்பிய பொருளதிகார அகத்திணையியல் நூற்பா 30 ,
"மன்னர் பாங்கிற் பின்னோர் ஆகுப"
என்பதாகும்.இந்நூற்பாவிற்கு நச்சினார்க்கினியார் உரையில் நடைப்பெற்ற இடைச்செருகலே கடந்த நூற்றாண்டில் பல அறிஞர்களை வேளிர் பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்திவிட்டது.ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.அஃதாவது," Oil and truth always come to the surface"என்பதாகும்.இதன் பொருள் எண்ணெய் எவ்வாறு நீரின் மேற்பரப்பிற்கு வந்து விடுகிறதோ அதே போல் உண்மையும் யார் தடுத்தாலும் மேற்பரப்பிற்கு வந்து விடும் என்தாகும்.
இனி,நச்சினார்க்கினியார் உரையில் ஏற்பட்ட இடைச்செருகலை நுணுகி ஆராய்ந்துக் கண்டறிவோம்.
நூற்பா 30 ற்கு உரிய நச்சி உரையை ஐந்து பகுதியாய் பிரித்து ஆராய்வோம்.
முதல் பகுதி :" இஃது இறுதிநின்ற வேளாளர்க்கு இன்னுமோர் பிரிவு விகற்பங் கூறுகின்றது."
இது நூற்பாவின் நோக்கத்தை விளக்குவாதாகும்.வேளாளருக்குரிய ஒருவகை பிரிவை விளக்குவதே இந்நூற்பாவின் நோக்கமாகும்.
இரண்டாம் பகுதி:-
"மன்னர் பாங்கின்- அரசரைச் சார்ந்து வாழும் பக்கத்தராகி நிற்றல் காரணமாக; பின்னோர்
ஆகுப - பின்னோரெனப்பட்ட வேளாளர் வரையறையின்றி வேந்தன் ஏவிய திறமெல்லாவற்றினும்
பிரிதற்கு ஆக்கமுடையராகுப என்றவாறு"
இது நூற்பாவை பிரித்து பொருளை விளக்குவதாகும்.
இந்நூற்பாவில் அரசர் ஏவிய போது வேளாளர் பிரிவர் என்று விளக்கப்படுகிறது.
மூன்றாம் பகுதி:-
"மன்னர் பின்னோரென்ற பன்மையான் முடியுடையோரும் முடியில்லாதோரும், உழுவித்து
உண்போரும், உழுது. உண்போருமென மன்னரும், வேளாளரும் பலரென்றார். ‘வேளாண்மாந்தர்க்கு’
‘வேந்துவிடுதொழிலில்’ என்னும் மரபிற் சூத்திரங்களான் வேளாளர் இருவகையரென்ப அரசரேவுந்
திறமாவன பகைவர்மேலும் நாடு காத்தான் மேலுஞ் சந்து செய்வித்தன் மேலும் பொருள்வருவாய்
மேலுமாம்."
இம்மூன்றாம் பகுதியில் மிகத்தெளிவாக நச்சி.
மன்னர் வேறு. வேளாளர் வேறு என்பதையும் மன்னரும் வேளாளரும் தனித்தனியே இருவகைப்படுவர் என்பதையும் கூறி விட்டார்.மேலும்,
"வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல
தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி."
என்னும் மரபியல் 635 வது நூற்பா உழுதுண்பாரைக் குறிக்கும் என்பதையும்.
"வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்
வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே."
என்னும் 636 வது மரபியல் நூற்பா உழுவித்துண்பாரையும் குறிக்கும் என்றும் தெளிவாக கூறிவிட்டார்.
மேலும், இப்பகுதியிலேயே அரசர் வேளாளரை என்னென்ன காரணம் பொருட்டு ஏவுவர் என்பதையும் கூறிவிட்டார்.அக்காரணங்களாவன,
1) பகைவர் மேலும்,
2)நாடுகாத்தல் மேலும்,
3)சந்துசெய்வித்தல் மேலும்,
4)பொருள் வருவாய் மேலும்.
ஆகிய நான்கே.
நான்காம் பகுதி:-
"அவருள் உழுவித்துண்போர் மண்டிலமாக்களுந் தண்டதி தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும்
அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும் வல்லமுங் கிழாரும் முதலிய
பதியிற்றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமையெய்தினோரும், பாண்டிநாட்டுக் காவிதிப்பட்ட
மெய்தினோருங், குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மக்கட் கொடைக்கு
உரிய வேளாளராகும். “இருங்கோ வேண்மானருங்கடிப் பிடவூர்” எனவுஞ் சான்றோர் செய்யுட் செய்தார்.
உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட்கோடலும் அவன் மகனாகிய
கரிகாற்பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலுங் கூறுவார். "
இந்நான்காம் பகுதி தான் ஐயத்திற்குரிய இடைச்செருகல் பகுதியாகும்.இந்நான்காம் பகுதி மேலுள்ள பகுதிகளுக்கு முரண்படுவதோடு மிகையான விளக்கமாகவும் திகழ்கின்றது.ஏனெனில்,மூன்றாம் பகுதி வரையிலுமே நூற்பாவிற்கு போதுமாக விளக்கம் கிடைத்து விடுகின்றது.வேளாளர்க்குரிய பிரிவு என்னவென்றும் கூறப்பட்டாகியாயிற்று.எந்நெந்த காரணம் பொருட்டு மன்னர் வேளாளரை ஏவுவர் என்பதையும் கூறியாயிற்று.எனினும், மிகைப்படக் கூறல் என்னும் குற்றம் தோன்றுமாறு
இந்நான்காம் பகுதி முடியில்லாத மன்னரும் வேளாளருள் உழுவித்துண்போரும் ஒன்றென்கிறது.இது நூற்பாவின் கருவிற்கே முரணானதாகும்.நூற்பாவில் மன்னர் என்றும் பின்னோர் என்றும் தனித்தனியாகக் கூறியிருக்க இருவரும் ஒருவரே என்றல் முதல் முரணாகும்.மன்னர் வேளாளரை (பின்னோர்) ஏவுவர் என்று நூற்பாவில் கூறியிருக்க இருவரும் ஒருவரே என்றல் இரண்டாம் முரணாகும்.
இதை நிறுவும் விதமாகவே நமக்கு அகத்திணையியல் 32 வது சூத்திர நச்சி உரையும் விளங்குகிறது.வேந்தர் எனப்பட்ட முடியுடை மன்னருக்கு உரிய தொழிலாகிய இலக்கணங்கள் யாவும் முடியில்லாத மன்னரான வேளிருக்கும் உரித்தாகும் என்று கூறிய நச்சி அத்தகைய இலக்கணங்கள் என்னென்ன என்பதையும் பின்வருமாறு கூறுகிறார்.அவை
1) பகைவயிற் தாமே சேறல்,
2) தாம் திறைபெற்ற நாடுகாக்க பிரிதல்,
3)மன்னர் பாங்கிற் பின்னோர் எனப்பட்ட வேளாளரை ஏவிக்கொள்ளும் சிறப்புமாம்.
இம்மூன்றுள் மூன்றாவது இலக்கணமே ஊன்றி நோக்கத்தக்க ஒன்றாகும்.வேளிர் வேளாளரை ஏவுவர் என்று இதில் கூறிய நச்சி 30 வது நூற்பாவில் வேளாளரே வேளிர் என்று கூறியிருப்பாரா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.அவ்வாறு அவர் கூறியிருப்பின் அது "முரண்பட கூறல்" என்னும் குற்றமாகும் அன்றோ?
இந்த கருத்தினை வேளிர் வரலாற்று ஆராய்ச்சியில் அறிஞர் பெருமகன் வேங்கடசாமி நாட்டார் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
Comments
Post a Comment