வடபால் முனிவர் யார்?






வடபால் முனி யார் என்பது பல நாள் சர்ச்சை, அதற்கு முடிவு கிடைத்துள்ளது!!!

திருமூலர் திருமந்திரம் ஒரு பாடல் உள்ளது -

"அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே"

இதில் "அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு
மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி" இந்த வரிக்கான பொருள் மட்டும் காண்போம்

அதாவது வேள்வி வளர்க்கிற அகத்தியர், கயிலாத்தில் இருக்கும் சிவபெருமானோடு சேர்ந்து வேள்வியை வளர்க்கிறார் என்பது இதன் பொருள்

இதில் பாலவன் என்பது சிவனை குறிக்கும் - பாலினி பாலவன் பாகம தாகுமே (திருமந்திரம்.1216)

மங்கி - மயங்கி

அங்கி - நெருப்பு/வேள்வி

உதயம் செய் - வளர்க்கின்ற

வடபால் தவமுனி - அகத்தியர்

இது நாம் சொன்ன பொருள் இது தவிர உரை ஆசிரியர் இதற்கு மிக அற்புதமாக இரண்டு பொருள்களை கொடுத்துள்ளார், இரண்டையும் உற்றுநோக்கினால் அவர் வடபால் தவமுனி என்று அகத்தியரையே சொல்வது தெளிவாக விளங்கும்

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் என்பதற்கு - நாள்தொறும் மந்திரங்களை ஓதி நாடு வளம் பெற யாகம் வளர்ப்பவன் அகத்தியன் என்று உரை ஆசிரியர் பொருள் கொள்கிறார்

அடுத்ததாக அங்கி உதயஞ்செய் மேல்பாலவனோடு மங்கி உதயஞ்செய் வடபால் தவமுனி - சிவ பெருமாள் வடபாலுள்ள இமைய மலையில் அங்கியாய் வீற்று இருக்கிறார் என்றும் அங்கு அவரை அகத்தியர் வழிபட்டு கொண்டு இருக்கிறார் என்று பொருள் கொள்கிறார், மங்கி என்பதற்கு மயங்கி என்று பொருள் கொண்ட ஆசிரியர் சிவபெருமான் அக்னி சொரூபமாய் வீற்றிருப்பதை பார்த்து மயங்கி அவரை அகத்தியர் எனும் வடபால் தவமுனி யாகம் வளர்த்து வழிபட்டு கொண்டிருக்கிறார் என்று பொருள் கொண்டு உரை எழுதியுள்ளார்

மேலும் இரண்டாவதாக சிவ பெருமான் ஆணைப்படி மேற்கு தொடர்ச்சி மலையில் தென்பால் உள்ள பொதிய மலையில் வந்து வடபால் தவமுனி ஆகிய அகத்தியர் உறைந்தார் என்று பொருள் எழுதியுள்ளார், ஆசிரியர் மங்கி - மயங்கி - கலந்து என்று குறிப்பு எழுதியுள்ளதை உற்றுநோக்குங்கள், கலந்து என்பதும் - உறைந்தனன் என்பதும் இந்த இடத்தில் ஒரே பொருளே ஆகும்

அடுத்த வரியில் எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே - என்பதற்கு சிவ வேள்வியில் தோன்றும் ஒளியால் எல்லா இடங்களிலும் வளம் கொழிக்கிறது என்று எழுதியுள்ளார், சிவ வேள்வியை எழுப்புபவர் அகத்தியர் என்றும் குறிப்பிட்டுள்ளார்

இதற்கு மாபெரும் சான்றாக அமைவது நச்சினார்க்கினியர் உரையாகும் -

"இதற்கு அகத்தியனாரே ஆண்டு இருத்தற்கு உரியர்’ என்று அவரை வேண்டிக் கொள்ள அவரும் தென்திசைக்கண் போதுகின்றவர்; கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு, பின்னர் யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக்கொண்டு புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவாரவதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்கோடி வேளிர் உள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டுபோந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிலின்கண் இருந்து" 

சிவன் தனக்கு நிகரான அகத்தியனை அழைத்து தென்திசை தாழ்ந்து வடதிசை உயர்ந்ததால் பெருமாள் வழி வந்த அரசரையும் வேளிரையும் தென்னகம் அழைத்து செல்ல சொன்னார், அகத்தியரும் அவ்வாறே செய்தார், எனவே வேளிர்ரோடு தொடர்பில் இருந்தவர் அகத்தியர் என்பது இதனால் விளங்கும், வேளிர்கள் அகத்தியர் வேள்வியில் பிறந்தவர் என்பதால் தான் வேளிர்களை அகத்தியர் தென்னகம் கொண்டு வந்தார் என்று கொள்வது சரியாக இருக்கும்

வடபால் முனிவர் அகத்தியர் என்று ஐரவாதம் மகாதேவன் குறிப்பிட்டுள்ளார், உ.வே.சா வடபால் முனிவரை சம்பு முனிவர் என்று குறிப்பிட்டுள்ளார், சம்பு முனிவரும் அகத்தியரும் ஒருவரே

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வந்ததால் அவரை வடபால் முனிவர் என்று இங்கு தமிழகத்தில் இருந்தவர்கள் நினைத்திருக்க வேண்டும், அதனால் தான் கபிலரும், திருமூலரும் அவரை வடபால் முனிவன் என்கின்றனர்

இத்தகைய சான்றுகளின் வாயிலாக புறநானூறு 201ஆம் பாடலில் வடபால் முனிவன் என்று அறியப்படுவது அகத்திய முனிவர் மட்டுமே என்பது மிகவும் தெளிவாகும்.

Comments

Popular posts from this blog

விஷ்ணுவே வன்னிய மஹாராஜாவாக அவதரித்தார்!!!

வன்னிய புராணத்தில் இடம் பெற்ற சிலை எழுபது பற்றிய குறிப்புகள்

கிருஷ்ணர் மேய்ப்பர் குலத்தவரா???