பாண்டிய மன்னனை 19 யானைகளோடு போரிட்டு மீட்ட பள்ளி வேளான் வம்சத்தவர்
கிபி 9 நூற்றாண்டு பாண்டியன் இரண்டாம் வரகுணன் காலத்து கல்வெட்டு மிகவும் சுவாரஸ்யமானது. அது பாண்டியனுக்கு கீழ் போரிட்டு உதவிய குறு நில மன்னர் மரபினரின் நான்கு தலைமுறை ஆற்றிய சிறப்புகளை குறிக்கிறது.
இந்த கல்வெட்டானது நான்காம் தலைமுறை மன்னன் பள்ளி வேளான் நக்கம் புள்ளன் மற்றும் அவர் மகன் ஆகியோர் நிலம் தானம் அளித்தது பற்றி குறிப்பிடுகிறது. அதில் அவர்கள் முன்னோர் யார் யார் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பற்றியும் குறிப்பிடுகிறது.
முதல் தலைமுறையை சேர்ந்த பள்ளி வேளான் பாண்டியனுக்காக போரிட்டு குழம்பூரில் இறந்தவன். அவர் மகன் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பராந்தகப் பள்ளி வேளான் இடவை போரில் பங்கேற்றவர்
"ஸ்ரீ குழும்பூரேற்றுக்குப்பட்டருக்கா....தபள்ளி வேளான் மகன் இடவையாத்திரை முற்றுவித்த பராந்தகப் பள்ளிவேளான்"
மூன்றாம் தலைமுறை சேர்ந்த அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளனக்கன் அவர்கள் விழிஞம்,இடவை,திருக்குடமூக்கு ஆகிய போர்களில் கோச்சடையான் மாறன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் அவர்களுக்கு பல உதவிகள் புரிந்தவர்.
"அவன் மகன் விழிஞத்தும்,இடவையிலும்,திருக்குடமூக்கிலுமஹாராஜா கோச்சடையமாறற்குப் பணிபலவுஞ் செய்து, முற்றுவித்த அண்டவேளான் அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளனக்கன்"
நான்காம் தலைமுறை சேர்ந்த பள்ளி வேளான் நக்கம்புள்ளன் அவர்கள் இரண்டாம் வரகுணன் சிங்கள மகாராஜாவை எதிர்த்து சாலக்ராமத்திலும்,செந்நிலத்திலும் போரிட்ட போது கூட போரிட்டவர். போர்க்களத்தில் பாண்டிய மன்னன் அயிராவணமெனும் யானையிடம் தீண்டப்பட அவனை 19 யானைகளோடு வீறு கொண்டு போரிட்டு அந்த யானையை கொன்று பாண்டிய மன்னன மீட்டான்.
இதனால் பல பரிசுகளும் குமரனென்னும் சிறப்பு பட்டமும் பெற்றான்.
"அவன் மகன் சிம்ஹளராஜ..... எல்லாஞ் செய்தும் சாலக்ராமத்து அயிராவணமென்னுமஹாமதத்தகஜத்தீண்டிப்படுத்த வரகுணமஹாராஜனுக்கு நவாதசகஜம் கொண்டு சென்று, செந்நிலத்துக்காட்டிக் குடுத்து பணி பலவுஞ் செய்து, குமரனென்னுஞ்... மத்தோடு சன்மான சற்காரம் பெற்றுப் பியர்ந.... மபாகுவான பள்ளிவேளா நக்கம்புள்ளன்"
இத்தகைய வீரம் மிக்க பள்ளி வேளான்கள் பாண்டிய மன்னர்களின் பல வெற்றிக்கு துணை நின்றவர்கள்.
மேற்குறிப்பிட்ட போர்கள் அனைத்தும் பிற பாண்டியர் ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ளது.
குலவம்சம், வேள்விக்குடி செப்பேடு, மற்றும் சின்னமண்ணுர் செப்பேடு ஆகியவற்றிலும் இது பற்றி இடம்பெற்றுள்ளது.
பாண்டியர் வரலாற்றில் முக்கியமானவர்கள் இவர்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
Comments
Post a Comment