மகாபாரத குரு குலத்தில் தோன்றிய வேசாலி வம்சத்தவரைப் பற்றி குறிப்பிடும் பல்லவ நிருபதுங்க வர்மனின் பாகூர் செப்பேடு
சென்ற பதிவில், "வேசாலிப் பேரரையர்கள்" என்பவர்கள் பல்லவ குல நுளம்பர்களின் உறவினர்கள் என்பதையும், அவர்கள் முதலாம் குலோத்துங்கச் சோழனின் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கல்வெட்டில் "குடிப்பள்ளி" (வன்னியர்) என்று குறிப்பிடப்பட்டதையும், வேசாலிப்பாடி என்பது கடலூர் பகுதியில் அமைந்திருந்ததைப் பற்றியும் பார்த்தோம்.
இந்த "வேசாலிப் பேரரையர்கள்" யார் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம். சந்திர குல பிரகாசன் என்று நந்திக்கலம்பகம் குறிப்பிடும் மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் மகன் நிருபதுங்க வர்மன் (கி.பி. 850 - 882) வழங்கிய பாகூர் செப்பேட்டின் தமிழ்ப் பகுதியானது கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-
"கோவிசைய நிருபதொங்கவர்மற்கு யாண்டு எட்டாவது வேசாலிப் பேரரையன் விண்ணப்பத்தால் விடேல்விடுகு காடுவெட்டித் தமிழ்ப் பேரரையன் ஆணத்தி ஆக அருவாநாட்டுக் கீழ்வழி வாகூர் நாட்டு நாட்டார் காண்க"
காடவ குல வேந்தன் நிருபதுங்க வர்மனின் பாகூர் செப்பேட்டின் தமிழ்ப் பகுதியானது தெரிவிப்பது என்னவென்றால், வேசாலிப் பேரரையர் அவர்கள், அரசர் நிருபதுங்க வர்மனிடம் விண்ணப்பித்த மூன்று ஊர்களை, அரசரின் ஆணையை நிறைவேற்றும் அதிகாரியான ஆணத்தி மூலமாக பெற்று, வாகூர் (பாகூர்) வித்யாஸ்தானத்திற்கு (கல்வி வளர்ச்சிக்கு) பிரம்மதேயமாக அளித்தார் என்று தெரியவருகிறது. அரசனின் ஆணையை நிறைவேற்றும் அதிகாரியின் பெயர் "விடேல்விடுகு காடுவெட்டித் தமிழ்ப் பேரரையன்" என்று தெரியவருகிறது.
இப்போது கடலூர் பாண்டிச்சேரி பகுதியில் இருக்கும் ஊரான "பாகூர்" என்ற ஊரானது மேற்குறிப்பிட்ட செப்பேட்டில் "வாகூர்" என்று வழங்கப்பட்டிருக்கிறது. இந்த "பாகூர்" என்பது சோழர் காலக் கல்வெட்டுகளில் :-
"ஜயங்கொண்ட சொழமண்டலத்து வெசாலிப்பாடி வாகூர்னாட்டு வாகூரான ஸ்ரீ அழகிய சொழ சதுர்வெதிமங்கலத்து"
"வடகரை வெசாலிப்பாடி வாகூரான ஸ்ரீ அழகிய சொழ சதுர்வெதிமங்கலத்து"
என்று வழங்கப்பெற்றிருக்கிறது. எனவே, பாகூர் (வாகூர்) என்ற ஊரானது பல்லவர் மற்றும் சோழர் காலங்களில், வேசாலிப்பாடியின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது என்று தெளிவாக தெரியவருகிறது. பாகூர் அருகில் உள்ள கடலூர் திருப்பாதிரிப்புலியூரும் சோழர் காலத்தில் "வேசாலிப் பிரம்மதேயம்" என்று வழங்கப்பட்டிருக்கிறது என்பதை முதலாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு ஒன்று கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-
"வெசாலிப் பிரமதெயத்திலிருக்கும் குடிப் பள்ளிப் பெருமான் இரண்டாயிரவநான ஸேநாபதி ராஜெந்தர சொழ வெசாலிப் பெரையந்"
காடவ வேந்தன் நிருபதுங்க வர்மனின் பாகூர் செப்பேட்டின் தமிழ்ப் பகுதி குறிப்பிட்டதை பார்த்தோம். அதே செப்பேட்டின் சமஸ்கிருத பகுதியானது, வேசாலிப் பேரரையரைப் பற்றி மிக விரிவாக குறிப்பிடுகின்றது :-
ஸ்லோகம்-18 : "அந்த (பல்லவன் நிருபதுங்கன்) அரசனால் உபகாரங்களை நன்கு அடைந்தவனும், குரு குலத்தில் தோன்றியவனும் ஆன வேசாலி வம்சத்து மார்த்தாண்டன், குடி மக்களுக்கு புகலிடம் அளிப்பதில் விருப்பம் கொண்டவனும் (ஆனான்)"
ஸ்லோகம்-19 : "சந்திரனைப் போல் உலகத்தின் திலகமாகவும், சமுத்திரத்தைப் போல் கம்பீரம் நிறைந்தவனுமான அந்த அரசன் உலகைப் பாதுகாக்கும் சூரியன் போல் உலக மக்களுக்கு (நிலையம்) இருப்பிடமாக ஆனான்"
ஸ்லோகம்-20 : "அதனால் நிலைதாங்கி என்ற பெயர் ஒரு தெய்வத்துக்கு ஏற்றது போல அந்த அரசனுக்கும் பொருத்தமாக அமைந்தது ; அல்லது அவன் (அரசன்) இயற்பெயர் நேரிடையாக நன்கு தோற்றமளித்தது எனலாம்"
ஸ்லோகம்-21 : "குரு வம்சத்தை வளரச் செய்யும் அவன் தன்னுடைய நாட்டிலே மூன்று கிராமங்களை நிருபதுங்கனான அரசனிடம் விண்ணப்பித்து ஆணத்தி மூலமாக அடைந்தான்"
ஸ்லோகம்-29 : "இந்த தர்மம் (அனைவருக்கும்) பொதுவானதால் அதை நீங்களும் பரிபாலிக்க வேண்டுமென்று இனி வரப்போகும் அரசர்களைக் குரு வம்சத்தில் பிறந்தவன் தானே வேண்டுகிறான்"
அதாவது, "வேசாலிப் பேரரையர்" அவர்கள் :-
"குரு குலத்தில் தோன்றியவன்"
"வேசாலி வம்சத்து மார்த்தாண்டன்"
"குடி மக்களுக்கு புகலிடம் அளிப்பதில் விருப்பம் கொண்டவன்" " சந்திரனைப் போல் உலகத்தின் திலகமானவன்"
"சமுத்திரத்தைப் போல் கம்பீரம் நிறைந்தவன்"
"உலகைப் பாதுகாக்கும் சூரியன் போல் உலக மக்களுக்கு இருப்பிடமாக விளங்கியவன்"
"நிலைதாங்கி என்ற பெயரினைப் பெற்றவன்"
"குரு வம்சத்தை வளரச் செய்தவன்"
"குரு வம்சத்தில் பிறந்தவன்"
என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள் என்று தெரியவருகிறது. மேற்குறிப்பிட்ட சமஸ்கிருத ஸ்லோகங்களின் மூலமாக "வேசாலிப் பேரரையர்களைப்" பற்றிய மிகத் தெளிவான வரலாற்று உண்மைகள் நமக்கு புலப்படுகின்றன. இது உண்மையிலேயே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது என்பதாகும். ஏனென்றால், வேசாலிப் பேரரையர்கள் என்பவர்கள், மகாபாரத குரு வம்சத்தினர் என்று மிகத் தெளிவாக பாகூர் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பதாகும். மகாபாரத குரு வம்சத்தினரைப் பற்றி தெரிவிக்கும் சாசனங்களில் இதுவே காலத்தால் பழமையானதாகும் என்று உணரமுடிகிறது. அதுவும் இது "அரச சமூக சாசனமாகும்".
இத்தகைய புகழ் மிகு வேசாலிப் பேரரையர்கள், முதலாம் குலோத்துங்கச் சோழனின் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில் கல்வெட்டில் "குடிப்பள்ளி" (வன்னியர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பதாகும்.
சோழர்களுக்கு உறவினர்களான வன்னிய வம்சத்து நீலகங்கரைய மன்னரான, "பஞ்சநதிவாணன் நீலகங்கரையன் நல்ல நாயனான சோழ கங்கதேவன்" அவர்கள், சோழர் காலக் கல்வெட்டு ஒன்றில் "குருகுலத்தரையன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள் என்று தெரியவருவதால், மகாபாரத குரு குலத்து அரச வம்சத்தவர்களின் வழி வந்தவர்கள் பண்டைய காலங்களில் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வந்திருக்கின்றனர் என்பது உறுதியாகிறது.
பாகூர் செப்பேடு என்பது "வேசாலி வம்சத்து மகாபாரத குரு குலத்தவர்களைப்" பற்றி தெரிவிக்கும் மிக முக்கியமான சான்றாகும். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் என்பது "பாடலிப்புத்திரம்" என்று முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அவர்களின் காலத்தில் வழங்கப்பெற்றது. அது போலவே "வேசாலி" என்ற பெயருமாகும். இந்த "பாடலிப்புத்திரம்", "வேசாலி" மற்றும் மூன்றாம் நந்திவர்ம பல்லவனை நந்திக்கலம்பகம் குறிப்பிடும் "அங்க நாடன்" (அங்க தேசத்தவன்) போன்ற பெயர்கள் எல்லாம், புகழ்ப் பெற்ற வட இந்தியா பீகாரில் இருக்கும் நகரங்கள் ஆகும் என்று தெரியவருகிறது.
Article by - Shri Murali Nayakar
Comments
Post a Comment