கிழக்கு இந்திய கம்பெனியை எதிர்த்த வட தஞ்சை வன்னிய பாளையக்காரர்கள்
பெரிய வகுப்பு முத்துக்குமாரசாமி நயினார் மற்றும் அவரது தம்பி சின்ன வகுப்பு நயினார் சீர்காழி - மாயவரம் பகுதியை ஆண்ட காவல்காரர்கள். கிட்டத்தட்ட சீர்காழியில் 68 கிராமங்கள் இவர்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்தது. இவர்களுக்கு உட்பட்ட இடங்களில் இருந்து காவல் பணமாக 1024 சக்கரம், 9 பணம், 67 காசு வாங்கி வந்தனர்.
1796ஆம் ஆண்டு தஞ்சை மன்னனுக்கும் கிழக்கத்திய கம்பெனி காரனுக்கும் இருந்த ஒப்பந்தத்தின்படி கும்பகோணமும், மாயவரமும் கம்பெனி கட்டுப்பாட்டுக்கு சென்றது.
இதனை எதிர்த்து பெரிய வகுப்பு நயினார் நேரடியாக கம்பெனிக்கு எதிராக புரட்சி செய்தார். ஒரு காவல்காரருக்கு காவல்பணம் பறிபோவதால் மட்டும் பாதிக்கப்பட்ட போவதில்லை மாறாக அவர்களுக்கு காலம் காலமாக இருந்து வரும் பாரம்பரிய உரிமை, கௌரவம், அந்தஸ்து என அனைத்தும் ஒரு அந்நியனுக்கு பறிபோவதால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்பாடுபட்டாவது அதனை மீட்க வேண்டும் என்னும் வேட்கை உருவானது.
தொடர்ச்சியாக கம்பெனிக்கு எதிராக செயல்பட்ட நயினாரின் தொல்லை தாங்க முடியாமல் அவரின் ஊத்தங்குடியில் உள்ள கோட்டையை கம்பெனி ரூப் சிங் என்பவரின் தலைமையில் பெரிய படையோடு 29ஆவது செப்டம்பர் 1799யில் முற்றுகையிட்டது. 4 பேரை கொலையும் 14 பேரை காயமடைய செய்து பெரிய வகுப்பு நயினார் போரில் வெற்றி கொண்டார். இந்த தோல்வி கிழக்கு இந்திய கம்பெனிக்கு பெருத்த அவமானமாகி போனது.
இதனால் எப்படியாவது நயினாரை பிடிக்க வேண்டும் என்று பெரிய முயற்சியில் கம்பெனி இறங்கியது. நயினாருக்கு பயந்து கம்பெனியின் முக்கிய இடங்கள் மற்றும் கஜானாவிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தஞ்சை மன்னனும் சின்ன வகுப்பு நயினாரும் கிழக்கு இந்திய கம்பெனிக்கு ஆதரவாக நின்றார்கள். 150 பேர் கொண்டு பல நாள் முயற்சிகள் செய்து பெரிய வகுப்பு நயினாரின் தகர்க்க முடியாதளவு கட்டப்பட்டிருந்த கோட்டையை தகர்த்தனர். பல நாள் கடந்தும் பெரிய வகுப்பு நயினாரை பிடிக்க இயலவில்லை. தொடர்ந்து காட்டிற்குள் பதுங்கிருந்து கிழக்கு இந்திய கம்பெனியினருக்கு கொடைச்சல் கொடுத்து கொண்டே இருந்தார் நயினார். அவருக்கு சக பாளையக்கார காவல்கார நண்பர்களான கும்பகோணம் காவல்காரர் தொண்டைமான் படையாட்சி, தஞ்சாவூர் காவல்காரர் மூப்பனார், பாபநாசம் காவல்காரர், கடலங்குடி காவல்காரர் ஆதிகாலிங்கராய உடையார் மறைமுகமாக உதவினர். இதில் கும்பகோணம் பாளையக்காரர் தொண்டைமான் அவர்கள் பெரிய வகுப்பு பாளையக்காரருக்கு நெருங்கிய சொந்தம் ஆகும்.
சில காலங்கள் பின்னர் தஞ்சை முழுவதும் கம்பெனிக்கு கீழ் வந்தது. நயினார் தலைக்கு 1000 சக்கரம் பணம் நிர்ணயித்தனர். தொடர்ந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக எங்கு திரும்பினாலும் எதிரிகள் என அவரை சுற்றுபோட காட்டில் தன் படையை மேற்கொண்டு வழிநடத்த இயலாமல் படையை களைத்தார். காட்டில் வாழ்ந்த வாழ்க்கை அவரை தொய்வடைய செய்தது. இறுதியாக 1803ஆம் ஆண்டு உடையார்பாளையம் கோட்டைக்காடு காட்டு பகுதியில் அவரை சிறைபிடித்து கூட்டி சென்று அவரை 2 ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் பெனாங் தீவிற்கு நாடுகடத்தினர் அங்கு அவர் 7 ஆண்டுகள் சிறையில் வாடினார்.
வரலாற்றில் பல வீரர்களின் புரட்சி கதைகள் மறைக்கப்பட்டே பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளது.
Comments
Post a Comment