பல்குன்றதைச் சேர்ந்த பள்ளி வேணாட்டரையன்(வேளிர்)
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், சியமங்கலத்தில் இருக்கும் இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு ஒன்று (கி.பி.1136) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-
.
"பல்குன்றக் கொட்டத்துத் தென்நாற்றூர் நாட்டுச் சியமங்கலத்து ஆளுடையார் தந்மிஸ்வரமுடையார் கொயிலிலெ சம்பு புரத்திருக்கும் பள்ளி செல்வன் இவ்வூரிருக்கும் பள்ளி வெணாட்டரையனைக் கைப்பிழையாலெய்து செத்தமையில் நாட்டவரும் சம்புவராயரும் கூடி இவனிவ் வெணாட்டரையனுக்காகச் சாவவெண்டாம் கைப்பிழைபுகுந்தது இதுக்குத் தூணாண்டார் கொயிலிலெ அரைவிளக்கு வைக்கச் சொல்ல அரை விளக்குக்கு பசு பதினாறுருவும்" (S.I.I. Vol-VII, No.68).
.
சங்ககால வேளிர் குல நன்னன் அரசாட்சி செய்த பல்குன்றத்து கோட்டத்தில் அடங்கிய சியமங்கலத்தில் இருக்கும் தன்மிஸ்வரமுடையர் கோயிலில் நாட்டவரும் சம்புவராயரும் சபை நிகழ்வுக்கு வருகைதந்திருந்தனர்.
.
சபை எதற்காக கூடியது என்றால், சம்பு புரத்தினைச் சேர்ந்த பள்ளி செல்வன் என்ற வன்னியன், பள்ளி வேணாட்டரையன் என்ற வன்னியனை கைத்தவறி அம்புஎய்தி கொன்றுவிட்டான்.
.
இந்த குற்றம் என்பது கைத்தவறி எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று என்ற காரணத்தினால், தண்டனை ஏதுமின்றி கோயிலுக்கு விளக்கெரிக்க தீர்ப்பு வழங்கினார்கள் சபையோர்கள். வேணாட்டின் அரையர்கள், வேணாட்டரையன் என்று வழக்கப்பட்டார்கள் என்று தெரியவருகிறது.
வேணாடு என்றால் ஒளிநாடு என்று பொருளாகும் என்று கல்வெட்டியல் அறிஞர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அவர், கீழ் வேள் நாடு (கீழ் வேணாடு), மேல் வேள் நாடு (மேல் வேணாடு) என்ற சொற்கள் வேளிர் என்ற சொற்களுடன் தொடர்புடையவை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
சங்கஇலக்கியமான மலைபடுகடாம் நன்னனை “பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன்” என்று குறிப்பிடுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் வட்டம் என்பது சங்ககாலம் முதல் சோழர் காலம் வரை "வேணாடு" என்று வழங்கப்பட்டதை செங்கம் வட்டத்தில் உள்ள கல்வெட்டுகள் :-
"பல்குன்ற கோட்டத்து மேல் வேணாட்டு தாழையூர்"
.
"பல்குன்றக் கோட்டத்துக் கீழ் வேணாட்டுக் காந்தளூர்க் கூற்றத்து"
.
"தென் வேணாட்டு மேலைக் கருங்காலிபாடி"
.
"வேணாடு முன்நூறும்"
என்று தெரிவிக்கின்றன. "மேல் வேணாடு" என்பது திருக்கோயிலூர் வரை இருந்துள்ளது என்பதை "மீ வேண்ணாட்டுக் கோவலூ ஊரரைசர் பெரும்பாணதியரைசர்" என்ற கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது.
.
இந்த செங்கம் என்ற "வேணாடு" சங்ககாலத்தில் வேளிர் குல மன்னனான நன்னன் என்பவரால் அரசாட்சி செய்யப்பெற்றது என்பதை "நன்னன் வேண்மான்" என்று அகநாநூறுப் குறிப்பின் மூலம் தெரியவருகிறது. வேளிரான வேண்மான் ஆட்சி செய்த நாடு "வேணாடு" என்று வழங்கப்பட்டது.
இத்தகைய புகழுடைய "வேணாட்டின் தலைவர்களாக" வன்னியர்கள் சோழர்கள் காலத்தில் விளக்கியிருக்கிறார்கள் என்பதை மேற்குறிப்பிட்ட இரண்டாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு "பல்குன்றதைச் சேர்ந்த பள்ளி வேணாட்டரையன்" என்று தெரிவிக்கிறது.
Article By - Shri Murali Nayakar
Comments
Post a Comment